இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக் குறைவு காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக அவரது மகன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
84 வயதான முகர்ஜி முன்னதாக ஆகஸ்ட்10 அன்று மூளை அறுவை சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது உடல் நிலையில் பெரிய அளவு முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லையென மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை, “அவரது நுரையீரல் தொற்று காரணமாக அவர் அதிர்ச்சியில் இருந்ததாக” டெல்லி ராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அவரது மகன் அபிஜித் முகர்ஜி கனமான மனதுடன் பிரணாப் முகர்ஜியின் மறைவை தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி 2012 முதல் 2017 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“பாரத் ரத்னா விருது பெற்ற பிரணாப் முகர்ஜியின் மறைவு இந்தியாவை துக்கப்படுத்துகிறது. அவர் நம் தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு அழியாத அடையாளத்தை உருவாக்கியுள்ளார். ஒரு அறிஞருக்கு சமமான அவர், சிறந்த அரசியல்வாதியும்கூட. அவர் சமூகத்தின் அனைத்து பிரிவுகளாலும் போற்றப்பட்ட நபராவார்.” என பிரதமர் நரேந்திர மோடி பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இல்லை என்று கேட்க வருத்தமாக இருக்கிறது. பொது வாழ்க்கையில் ஒரு மகத்தான அவர் உணர்வுப்பூர்வமான அர்ப்பணிப்புடன் இந்தியாவுக்கு சேவை செய்தார். தேசம் தனது தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் இரங்கல்.” என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.