Tiruvannamalai: சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில், ரஷ்யாவிலிருந்து வந்திருந்த 21 வயதுப் பெண் மீது பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
திருவண்ணாமலை, அங்கிருக்கும் அண்ணாமலை கோயிலுக்காக மிகவும் பிரசித்தி பெற்றது. அந்தக் கோயிலைக் காணுவதற்காகவே, வெளிநாடுகளிலிருந்து பலர் தினம் தினம் அங்கு வருவர். அதைப் போன்றுதான் ரஷ்யாவிலிருந்து 21 வயதுமிக்க இளம்பெண் ஒரு வாரத்துக்கு முன்னர் திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். அவர் அங்கிருக்கும் ஒரு அபார்ட்மென்ட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி, ரஷ்யப் பெண் அவரது அபார்ட்மென்ட்டில் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.
அதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக் கொடுக்கப்பட்டது. சிகிச்சையளித்த மருத்துவர்கள், ரஷ்யப் பெண் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததாக தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நினைவு திரும்பியுள்ளது. பிறகுதான், நடந்த சம்பவம் குறித்து அவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீஸ், அபார்ட்மென்டின் சொந்தக்காரர் பாரதி என்பவரையும், இன்னும் மூன்று பேரையும் கைது செய்துள்ளது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சென்னையில் 11 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்து அதிர்ச்சியளித்துள்ள நிலையில், இந்த சம்பவமும் தமிழக அளவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.