This Article is From Oct 03, 2019

Terrorists In Delhi: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 4 பேர் டெல்லியில் ஊடுருவல்! உளவுத்துறை எச்சரிக்கை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் தலைநகர் டெல்லியில் ஊடுருவியுள்ளதாகவும், இவர்கள் பண்டிகை காலங்களில் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளது குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு எச்சரிக்கை வந்துள்ளது.

New Delhi:

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் தலைநகர் டெல்லியில் ஊடுருவியுள்ளதாகவும், இவர்கள் பண்டிகை காலங்களில் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தலைநகரில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளது குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு நேற்று மாலை எச்சரிக்கை வந்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்குதல் நடைபெறலாம் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரை குறிவைக்கும் பயங்கரவாத திட்டம் குறித்து இன்டெல் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து நாடு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.

மேலும், 30 முக்கிய நகரங்களின் பெயர் குறிப்பிடப்பட்டு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து, பல தரப்பில் இருந்தும் எச்சரிக்கை தகவல் வந்துள்ள நிலையில், இந்திய விமான படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீநகர், அவந்திபோரா, ஜம்மு, பதான்கோட், ஹிண்டான் உள்ளிட்ட பகுதிகளுக்கு 'ஆரஞ்ச் ஆலர்ட்' விடுக்கப்பட்டு, இந்திய விமானப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கு கிடைத்த தகவல்களின்படி, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர வான் வழியாக தற்கொலைத் தாக்குதல் நடத்த சதி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், செப்.10ம் தேதி, சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு பணியகத்தால் அந்த அச்சுறுத்தல் கடிதம் பெறப்பட்டுள்ளது. இந்தியில் உள்ள அந்த கடிதத்தில், சட்டப்பிரிவு 370வதை ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்கு எதிராக, ஜெய்ஷ் அமைப்பை சேர்ந்த,  ஷம்ஷர் வானி என்பவரிடமிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சிறப்புப் படை போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான விமான நிலையம்  மற்றும் ரெயில் நிலையங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் தலைநகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

.