கஜா புயல் வந்ததை அடுத்து, நாகை நிவாரண முகாமில் தஞ்சமடைந்திருந்த 4 பெண்கள், முகாமுக்கு அருகில் நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களையும், தென் மாவட்டங்கள் பலவற்றையும் கடுமையாக பாதித்தது. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா கோரத் தாண்டவம் ஆடியது. புயல் கடந்து ஒரு வாரத்துக்குப் பின்னரும் அம்மாவட்டத்தின் பல இடங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பாத நிலை இருக்கிறது.
இந்நிலையில், நாகையின் தலைஞாயிறு நிவாரண முகாமில், அவ்வூரைச் சேர்ந்த பலர் தஞ்சம் அடைந்திருந்தனர். அப்படி தஞ்சம் அடைந்திருந்தவர்களில் 4 பெண்கள் மற்றும் 1 ஆண் மீது, நீர்முலை கிராமத்திற்கு அருகே வேன் மோதியது. இந்த விபத்தில் 4 பெண்களும் உயிரிழந்துவிட்டனர். ஆணுக்கு பலத்தக் காயங்கள் ஏற்பட்டதை அடுத்த மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
நவம்பர் 16 ஆம் தேதியன்று, நாகப்பட்டினம் - வேதாரண்யத்திற்கு இடையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது கஜா புயல். இதனால் பல தமிழக மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், நாகையில் பாதிப்பு அளவிட முடியாத அளவுக்கு இருக்கிறது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)