தொடர்ந்து மதுரோவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் வெனிசுலாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
ஹைலைட்ஸ்
- மதுரோவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் நாடுகள் அணி வகுப்பு
- சீனா மற்றும் ரஷ்யா, மதுரோவுக்கு ஆதரவான நிலைப்பாடு
- ஐரோப்பிய நாடுகள், தொடர்ந்து மறு தேர்தல் கோரி வருகின்றன
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு நாடுகளும், ‘மீண்டும் தேர்தலை நடத்துங்கள்' என்று அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் அரசு, ‘நாட்டில் புதியதாக தேர்தல் குறித்த அறிவிப்பை உடனடியா வெளியிட வேண்டும். இல்லையென்றால் எதிர்கட்சித் தலைவரான யுவான் கைடோவை அதிபராக நாங்கள் அங்கீகரிப்போம்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் வெனிசுலா நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றார் நிகோலஸ் மதுரோ. ஆனால், அந்தத் தேர்தல் ஒழுங்கான முறையில் நடத்தப்படவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி 23 ஆம் தேதி, எதிர்கட்சித் தலைவர் கைடோ, மதுரோவுக்கு எதிராக அணி திரள அறைகூவல் விடுத்தார். அன்றே, தன்னை நாட்டின் அதிபராகவும் பிரகடனம் செய்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா, அவருக்கு ஆதரவு தநத்து. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில், கொலம்பியா, கனடா உள்ளிட்ட நாடுகளும் கைடோவை அதிபராக அங்கீகரித்தது. ஆனால், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள், ‘வெனிசுலாவின் உள்நாட்டுக் குழப்பத்தில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது' என்று கண்டித்து, மதுரோவுக்கு ஆதரவுக் கரம் நீட்டின.
தொடர்ந்து மதுரோவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் வெனிசுலாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் தரப்பு, ‘மதுரோ, உடனடியாக தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையென்றால் கைடோவை இடைக்கால அதிபராக நாங்கள் ஏற்போம்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் தரப்பில், இந்த எச்சரிக்கை நேற்று விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.