Nun Rape Case: பிராங்கோ முல்லக்கால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்
Thiruvananthapuram: கன்னியாஸ்திரியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட பாதிரியார் பிராங்கோ முல்லக்காலுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
கடந்த மாதமே தனக்கு ஜாமின் வழங்குமாறு பாதிரியார் பிராங்கோ, கீழ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அப்போது அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது கேரள உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்ட பிணை வழங்கியுள்ளது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், கேரளாவாக்குள் வரக் கூடாது, வழக்கை விசாரித்து வரும் அதிகாரியிடம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை நேரில் ஆஜராக வேண்டும் என்று பிணை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்திலும் தனக்கு பிணை வழங்கக் கோரி பாதிரியார் பிராங்கோ மனுத் தாக்கல் செய்திருந்தார். அப்போது நீதிமன்றம், ‘பாதிரியார் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்ததால், வழக்கு விசாரணையை அவர் குலைப்பதற்கு வாய்ப்பு உள்ளது’ என்று கூறி பிணை வழங்குவதை நிராகரித்தது.
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக அந்த கன்னியாஸ்திரி காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். பாலியல் புகார் எழுந்ததை அடுத்து, பாதிரியார் பிராங்கோ, ஜலந்தர் பிஷப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.