உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் மாற்றம் செய்துள்ளது.
ஹைலைட்ஸ்
- அனைவருக்கு கொரோனா பரிசோதனை இலவசம் என்று முன்பு உத்தரவிட்டிருந்தது
- உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தனியார் ஆய்வகங்கள் அதிருப்தி தெரிவித்திருந்தன
- ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக பரிசோதனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
New Delhi: ஏழை மக்களுக்கு கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஏழைகள் யார் என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
அதே நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிர்ணயித்திருக்கும் கட்டணத்தை, தனியார் ஆய்வகங்கள் வசூலித்துக் கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி அளிதிருக்கிறது.
கடந்த வாரம் கொரோனா சோதனை குறித்து உத்தரவிட்டிருந்த உச்ச நீதிமன்றம், அனைவருக்கும் பரிசோதனையை இலவசமாக்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஒருவருக்கு பரிசோதனை செய்ய ரூ. 4,500 வரை ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய உத்தரவுப்படி ஏழைகளுக்கு பரிசோதனை இலவசம் என்பதும், அந்த ஏழைகள் யார் என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனையை இலவசமாக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது-
கொரோனாவை தடுப்பதில் மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது என்பதை பார்த்து வருகிறோம். நாங்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும் என்று கூறியிருந்தோம். அந்த உத்தரவில் சில மாற்றங்களை செய்திருக்கிறோம். ஏழைகளுக்கு சோதனை இலவசமாக செய்யப்பட வேண்டும். அவர்கள் யார் என்பதை அரசு முடிவு செய்து கொள்ளலாம். இதுதொடர்பாக அரசு இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த முறை இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், கொரோனா பரிசோதனை என்பது மனிதநேய அடிப்படையிலானது என்றும், எல்லோருக்கும் அதனை இலவசமாக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த பிரபல தனியார் ஆய்வக குழுமத்தின் தலைவர் கிரன் மஜும்தார், 'அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை இலவசமாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது, ஆய்வக தொழிலை முற்றிலுமாக பாதிக்கும். பெரும் தொகையை செலவழித்து தனியார் ஆய்வகங்கள் இயங்க முடியாது' என்று கூறியிருந்தார்.
இந்தியாவில் கொரோனா பரிசோதனையை செய்துகொள்ள பல்வேறு தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒருவருக்கு ரூ. 4,500 வரையில் வசூலிக்கப்படுகிறது.