This Article is From Apr 23, 2020

ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் 407 அம்மா உணவகங்களில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படும். 

ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு: மாநகராட்சி அறிவிப்பு

ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு: மாநகராட்சி ஆணையர்

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு
  • இலவச உணவு தர பல நன்கொடையாளர்களர் நிதி அளித்துள்ளனர்
  • சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் 407 அம்மா உணவகங்களில் இலவச உணவு

ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கூலித் தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில், இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை மாநகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் 407 அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் ஏற்கனவே, பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. இதனை கண்டித்த எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு உத்தரவின்படி சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக, மக்களின் நலன் கருதியும், சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் 407 அம்மா உணவகங்களில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படும். 

பொதுமக்களின் இடம், பெயர், தொலைப்பேசி எண்ணை பெற்றுக்கொண்டு இலவச உணவு அளிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இலவச உணவு தர பல நன்கொடையாளர்களர் நிதி அளித்துள்ளதை அடுத்து சென்னை மாநகராட்சி இந்த ஏற்பாடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.