This Article is From Jun 11, 2019

உ.பி முதல்வருக்கு எதிரான 'அவதூறு' கருத்து; ‘இது என்ன கொலைக் குற்றமா?’- நீதிமன்றம் கேள்வி!

ஆதித்யநாத் குறித்து ‘அவதூறான’ கருத்து கூறியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த சில நாட்களில் மட்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உ.பி முதல்வருக்கு எதிரான 'அவதூறு' கருத்து; ‘இது என்ன கொலைக் குற்றமா?’- நீதிமன்றம் கேள்வி!

யோகி ஆதித்யநாத் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாகக் கூறி கைது செய்யப்பட்டவர் செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா.

New Delhi:

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து, பத்திரிகையாளர் பிரஷாந்த் கனோஜியாவின் ‘அவதூறான' கருத்து ஒன்றும் கொலைக் குற்றம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் கனோஜியாவை விடுதலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். 

யோகி ஆதித்யநாத் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாகக் கூறி கைது செய்யப்பட்டவர் செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா. அவரின் மனைவி, தனது கணவரை விடுவிக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.

எனது கணவர் கைது செய்யப்பட்டபோது, தேவையான எந்த சட்ட வழிகாட்டுதல்களையும் போலீசார் பின்பற்றவில்லை, எனவே இந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என பிரசாந்த் கனோஜியாவின் மனைவி, ஜாகிஷ் அரோரா குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து அரோரா NDTV-யிடம் கூறியதாவது, ‘நடந்த சம்பவங்கள் எனக்கு தெளிவாக நியாபகம் இல்லை. அவை அனைத்தும் 5 நிமிடத்தில் நிகழ்ந்தவையே. வீட்டிற்கு கீழே சென்ற பிரசாந்த் மீண்டும் திரும்பி வந்து, உடைகளை மாற்ற வேண்டும் என்றும் 2 பேருடன் செல்ல வேண்டும் என்று கூறினார்' என்றார்.

இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிமன்றம், “நாங்கள் சாதரணமாக இதைப் போன்ற வழக்குகளை எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், இப்படியொரு குற்றத்திற்கு ஒரு நபர் 11 நாட்கள் சிறையில் இருக்கக் கூடாது” என்று கருத்து கூறியது. 

இதேபோல், யோகி ஆதித்யநாத் குறித்து பெண் பேசும் வீடியோவை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பியதை அடுத்து, அந்த சேனலின் தலைமையாசிரியர் ஈஷிகா சிங், செய்தி ஆசிரியர் அணுஜ் சுக்லா, ஆகியோரையும் உத்தரபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். ஆதித்யநாத் குறித்து ‘அவதூறான' கருத்து கூறியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த சில நாட்களில் மட்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


 

.