முத்தலாக் சட்டவிரோதமானது என்று அரசு கூறியுள்ள நிலையில், அதனை சட்டமாக்க முயற்சிக்கப்படுகிறது.
New Delhi: எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே முத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மசோதாவை தாக்கல் செய்தார்.
முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த முத்தலாக் மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு போதுமான பலம் இல்லாத காரணத்தால், அது நிறைவேற்றப்படவில்லை. இதனால், 16வது மக்களவை முடிந்த நிலையில், அந்த முத்தலாக் மசோதாவும் மாநிலங்களவையில் காலாவதியாகிவிட்டது.
இந்நிலையில், முத்தலாக் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்த நிலையில், அதைச் சட்டமாக்கும் முயற்சியில் இன்று முத்தலாக் மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.
இந்த புதிய அவசர சட்ட மசோதாவின்படி, முத்தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் இஸ்லாமிய ஆண்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யும்.
காங்கிரஸ், தரப்பில் சசிதரூர், இந்த முத்தலாக் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மசோதா முஸ்லிம் ஆண்களுக்கு எதிரானது. கிரிமினல் குற்றமாக கருதக்கூடாது.
மற்ற மதங்களை சார்ந்தவர்களும் தங்களது மனைவியை விவாகரத்து செய்து வருகின்றனர். அதனால், இது ஒரு பாரபட்சமான மசோதா என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிலுவையிலேயே இருந்து வந்தது.
இதனிடையே, கடந்த மாதம் 16வது மக்களவை கலைக்கப்பட்டதை அடுத்து நிலுவையில் இருந்த மசோதாக்கள் காலாவதியானது.
இதன் காரணமாக தற்போது புதிதாக அமைந்துள்ள 17வது லோக்சபாவில் இன்று இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. புதிய திருத்தங்களுடன் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.