தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து அரசாணை வெளியீடு!
தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தந்தை, மகன் இருவரும் காவல்துறையினரின் பொறுப்பில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில், காவல்துறையினருடன் சேர்ந்து பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸை சேர்ந்தவர்களும் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸை தாக்கியதாக புகார் எழுந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸை தடை செய்ய வேண்டும் என பல ஜனநாக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியிருந்தன.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும், தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் சித்தரவதை மரணத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கும் தொடர்பு என புகார் எழுந்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.