ஹைலைட்ஸ்
- 2014-ம் ஆண்டு மோடி, வாரணாசியில் நின்று வெற்றி பெற்றார்
- 2019-ம் ஆண்டுக்கு உ.பி-யின் மகர் தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளார்
- யோகி கபிருக்கு, பிரதமர் அஞ்சலி செலுத்துவார்
Sant Kabir Nagar: பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநில சந்த் கபிர் நகருக்குப் பயணம் செய்கிறார். அங்கு அவர் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். இது அடுத்த ஆண்டு நடக்கப் போகும் லோக்சபா தேர்தலுக்கான அரசியல் மூவ் ஆக பார்க்கப்படுகிறது.
இன்னும் ஒரே ஆண்டில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரப் போகிறது. பாஜக சார்பில் பிரதமர் மோடி தான் பிரசாரத்தை முன் நின்று எடுத்துச் செல்வார். கடந்த முறை இந்திய அளவில் மிகவும் புனிதமாக பார்க்கப்படும் வாரணாசி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் மோடி. இந்த முறையும் இதைப் போன்ற ஒரு ‘புனிதமான’ தொகுதியில் தான் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
வாரணாசியிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மகர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று ஆருடம் சொல்லப்படுகிறது. மகரில் இறப்பவர்கள் நேரடியாக நரகத்துக்குச் செல்வர் என்ரொரு மூட நம்பிக்கை இருக்கிறது.
மகர் பகுதியில் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யோகியான கபிரைச் சுற்றி இந்த நம்பிக்கை பின்னப்பட்டுள்ளது. இந்நிலையில் யோகி கபிரின் 500 வது பிறந்த நாளை முன்னிட்டு, மகரில் உள்ள அவர் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளார் மோடி. யோகி கபிரின் குகைக்குச் சென்று பார்வையிட்ட பின்னர், ‘கபிர் அகாடமி’-க்கு அடிக்கல் நாட்ட உள்ளார் அவர்.
இதையடுத்து, கோராக்பூரிலிருந்து 30 கிலோ மீட்டரிலேயே இருக்கும் இடத்தில் உரையாற்ற உள்ளார் மோடி. கோராக்பூர், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியாகும். ஆதித்யநாத், தொடர்ந்து 5 முறை இந்தத் தொகுதியிலிருந்து தான் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இந்த ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் பாஜக தோல்வியுற்றது.
அகிலேஷ் யாவதின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் இணைந்து பாஜக-வுக்கு எதிராக இந்தத் தொகுதியில் கூட்டணி வைத்ததால், தோல்வி கண்டது பாஜக. இந்நிலையில், 2019 ஆம் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று அகிலேஷ் மற்றும் மாயாவதி அறிவித்துள்ளனர். இதனால், பாஜக, சென்ற முறை உத்தர பிரதேசத்தில் அதிக தொகுதியில் வெற்றி கண்டது போல் இந்த முறை இருக்காது என்று கூறப்படுகிறது. இதையொட்டித்தான், தனது பிரசாரத்தை உத்தர பிரதேசத்திலிருந்து பிரதமர் மோடி ஆரம்பித்துள்ளார் எனப்படுகிறது.
இது மட்டுமின்றி, யோகி கபிரை பிரதமர் கையிலெடுத்திருப்பதற்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. கபிர், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும், இந்து - முஸ்லீம்கள் இடையில் சகிப்புத்தன்மை வளர்த்தவராகவும் அறியப்படுகிறார். இதையொட்டித்தான், யோகி கபிரை தற்போது முன்வைத்து பிரதமர் அரசியல் காய் நகர்த்தல்களில் இறங்கியுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியிலும் பிரதமர், யோகி கபிரின் கூற்றுக்களை மேற்கோள் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பசுவதை செய்ததாகக் கூறி உத்தர பிரதேசத்தில் சிறுபான்மையினர் அடுத்தடுத்து தாக்கப்பட்டு வரும் சம்பவம் முஸ்லீம் மற்றும் தலித் மக்களிடையே பாஜக-வின் செல்வாக்கை வெகுவாக குறைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. இந்நிலையில், அகிலேஷ் - மாயாவதி கூட்டணியைச் சமாளிக்க, மோடி தலைமையிலான பாஜக அதிகமாகவே மெனக்கெட வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது.