3 மாநகராட்சிகளுக்கான முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவு; சென்னையில் மீண்டும் நீட்டிக்க திட்டமா?
ஹைலைட்ஸ்
- 3 மாநகராட்சிகளுக்கான முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவு
- சென்னையில் முழு ஊரடங்கை மீண்டும் நீட்டிக்க திட்டமா?
- சென்னையில் நேற்று ஒரே நாளில் 101 பேர் கொரோனாவால் பாதிப்பு
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 3 மாநகராட்சிகளுக்கான முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில், சென்னையில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த முழு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளிலும் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 29.4.2020 இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும் என்றும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 28.4.2020 இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
தொடர்ந்து, இந்த முழு ஊரடங்கின் போது, மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம், காவல், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை, மின்சாரம், ஆவின், உள்ளாட்சிகள், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட துறைகள் தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும். இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33% பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 3 மாநகராட்சிகளுக்கான முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு நேற்று இரவுடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு மே.3ம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், தமிழக அரசு 5 நகரங்களில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது. ஏற்கனவே நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், மருந்தகங்கள் தவிர எந்த விதமான கடைகள், வணிக நிறுவனங்களும் செய்லபட அனுமதி கிடையாது.
எனினும், பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காகவும், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ஏப்.20ம் தேதி முதல் மத்திய அரசு இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாகத் தளர்த்தி வருகிறது.
அந்தவகையில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள், சலூன்கள் மற்றும் டெய்லர் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில், முதன் முறையாக அத்தியாவசிய, அத்தியாவசிய தேவை இல்லாத கடைகளும் இயங்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது.
எனினும், இந்த உத்தரவில் மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் செயல்பட தொடர்ந்து, தடை நீடிக்கும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல், இந்த கட்டுப்பாடு தளர்வுகள் என்பது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்குப் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.