மொத்தம் உள்ள 5067 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 87 இடங்களையும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தேசிய கட்சியான பாஜக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கனிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியில் 6 இடங்களையும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 87 இடங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று மாலை நிறைவு பெற்று அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது.
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை.
முதல் கட்ட தேர்தலின் போது 76.19 சதவீதம் வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன. மொத்தம் 515 மாவட்டக் கவுன்சிலர், 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. மீதம் உள்ள பதவிகள் பஞ்சாயத்து தேர்தலுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று முன்தினம், (2ம்தேதி) காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையானது இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது, பல்வேறு சிக்கல்களையும் கடந்து நேற்று மாலையில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்று அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக 270 இடங்களையும், அதிமுக 242 இடங்களையும் கைப்பற்றியது.
இதேபோன்று மொத்தம் உள்ள 5067 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக 2338 இடங்களையும், அதிமுக 2,185 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 94 இடங்களை கைப்பற்றியது. எனினும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் ஒரு இடத்தையும் அமமுக கைப்பற்றவில்லை.
இந்நிலையில், தேசிய கட்சியான பாஜக இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கனிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் வெற்றி விவரம், மொத்தமுள்ள 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியில் 6 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது.
இதேபோல், மொத்தம் உள்ள 5067 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 87 இடங்களையும் பாஜக கைப்பற்றி கனிசமான வெற்றியை பெற்றுள்ளது.
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதியில் வெற்றி பெற்ற 6 இடங்கள்:
கன்னியாகுமரி - 2
கோயம்புத்தூர் - 1
தேனி - 1
நாகை - 1
ராமநாதபுரம் - 1
இதேபோல், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் வெற்றி பெற்ற இடங்கள்,
கன்னியாகுமரி - 31, தஞ்சாவூர் - 7, நாகை - 6, நீலகிரி - 4, ராமநாதபுரம் - 3, தூத்துக்குடி - 3, திருவாரூர் - 3, திருப்பூர் - 3, கோவை - 3, கரூர் - 3, கடலூர் - 2, சிவகங்கை -2, திருவள்ளூர் - 2, நாமக்கல் - 2, புதுக்கோட்டை - 2, மதுரை - 2, விருதுநகர் - 1, தேனி - 1, திருவண்ணாமலை - 1, திருச்சி - 1, திண்டுக்கல் - 1, கிருஷ்ணகிரி - 1 உள்ளிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.