தமிழகத்தில் முழு ஊரடங்கு? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை அவசர ஆலோசனை!
ஹைலைட்ஸ்
- அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
- தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு
- மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத கடைசி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 2 மாதங்களகாக தொடர்ந்த ஊரடங்கால், தினக்கூலிகள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் வருமானம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் பின்னர், படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்தது.
எனினும், கொரோனா பரவல் குறையாமல் இருந்தது, குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த 19ஆம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னையில் இருந்து அதிகளவில் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால், தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுரையில் வேகமாக பரவியதால் அங்கு இன்று இரவு 12 மணி ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,710 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 62,087ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் நேற்று 1,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து, தலைமை செயலாளர் சண்முகம் நேற்று மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார். நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.