கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை திமுக – காங்கிரஸ் இன்று வெளியிடுவதாகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு 9 இடங்கள்வரை ஒதுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டன.
இதனிடையே, கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி நேற்று முன்தினமும், நேற்றும் சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து, மாலையில் அண்ணா அறிவாலயம் வந்த திமுக - காங்கிரஸ் நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டது.
இதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. அதாவது, தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எத்தனை தொகுதிகள் என்பது இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பதை இன்னும் சில கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
இதன் பின்னர் பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீட்டில் முழுதிருப்தி அடைந்தோம். தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் 100 சதவீத வெற்றியைப் பெறும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர், மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க: திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து! - காங்கிரசுக்கு 10 தொகுதிகள்