மருத்துவ ஆய்வுகளை நாடுகளுக்கு மத்தியில் சுதந்திரமாக பரிமாறிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறார் மோடி.
ஹைலைட்ஸ்
- கொரோனாவை எதிர்கொள்வது குறித்து ஜி. 20 நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை
- கொரோனா தடுப்பு, நிவாரண நிதியாக 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு
- ஏழை நாடுகளுக்கு உதவ வேண்டும் என ஜி-20-க்கு உலக வங்கி கோரிக்கை
New Delhi: கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை குரூப் 20 எனப்படும் ஜி - 20 நாடுகள் ஒதுக்கியுள்ளன. ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடியாகும். இதன்படி 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்பது 5 லட்சம் கோடி அமெரிக்கா டாலராக மதிப்பிடப்படுகிறது.
இந்த 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை ரூபாய் மதிப்பில் ரூ. 3.82 கோடி கோடி என கணக்கிட்டுக் கொள்ளலாம். இவ்வளவு பெரிய தொகை கொரோனா பாதிப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜி. 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடினர். இந்த கூட்டமைப்பில் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது. கூட்டத்திற்கு பின்னர் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-
கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள வலுவான, பரந்த அளவிலான, அறிவியல் அடிப்படையில் உலக நாடுகளின் கூட்டமைப்பு தேவைப்படுகிறது. உலக நாடுகளுக்கு பொதுவான அச்சுறுத்தலாக இருக்கும் இந்த கொரோனாவை நாம் ஒன்றிணைந்து எதிர்ப்போம்.
கொரோனாவால் சர்வதேச அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் ஒன்றிணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை பாதுகாத்து வளர்ச்சிப் பாதையில் மீண்டும் பயணிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏழை நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்நாடுகளின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றுள்ள நிலையில் அவற்றுக்கு பொருளாதார சக்தி கொண்ட ஜி 20 நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று உலக வங்கியும், சர்வதேச நிதியமும் கோரிக்கை வைத்துள்ளன.
கொரோனா குறித்த ஆய்வுத் தகவல்களை சக நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும், தங்களது நாடுகளில் உள்ள சுகாதார சாதனங்களை வலுப்படுத்த உதவ வேண்டும், உலக தேவைகளுக்கு ஏற்ப மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாநாட்டில் பேசிய தலைவர்கள் முன் வைத்தனர்.