This Article is From Jun 11, 2018

இந்தியாவைத் தாக்கும் ட்ரம்ப்… மாறுமா இறக்குமதி வரி விதிப்பு!?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கிட்டத்தட்ட தான் நட்புடன் இருக்கும் அனைத்து நாடுகளின் மீதும் ஒரே நேரத்தில் கோபம் கொண்டுள்ளார்

இந்தியாவைத் தாக்கும் ட்ரம்ப்… மாறுமா இறக்குமதி வரி விதிப்பு!?

ரெசிப்ரோக்கல் வரி குறித்து பேசியுள்ளார் ட்ரம்ப்

ஹைலைட்ஸ்

  • ஜி7 மாநாடு கனடாவில் நேற்று நடந்தது
  • சரியான வரி விதிப்பு முறை இல்லை என்றால் வர்த்தகம் வேண்டாம், ட்ரம்ப்
  • இந்தியாவையும் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்
New Delhi:

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கிட்டத்தட்ட தான் நட்புடன் இருக்கும் அனைத்து நாடுகளின் மீதும் ஒரே நேரத்தில் கோபம் கொண்டுள்ளார். ஜி7 மாநாட்டில் கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை பல விஷயங்களுக்கு நேரடியாக குற்றம் சாட்டிய ட்ரம்ப், தற்போது தன் விமர்சனப் பார்வையை இந்தியா நோக்கி திருப்பியுள்ளார்.

அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்ற ஜி7 மாநாடு கனடாவில் நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் நேற்று கூட்டறிக்கை விடப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் ஒரு பெரும் அரசியல் களேபரமே நடந்து முடிந்தது. குறிப்பாக, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கும் இடையில் நடந்த கருத்துப் போர் உலக அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வரியில் மாற்றம் செய்தது அமெரிக்க அரசு. இந்த வரி அதிகரிப்பை திரும்ப பெற வலியுறுத்தி கனட பிரதமர் ட்ரூட், ட்ரம்ப்க்கு போன் மூலம் வலியுறுத்தினார். அப்போது, 'நாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்குக்கும் வரி விதிப்பை நீங்கள் மாற்றி அமையுங்கள். பிறகு பார்க்கலாம்' என்று பதிலடி கொடுத்தார். இந்த மோதல் நேற்று முடிந்த ஜி7 மாநாட்டிலும் தொடர்ந்தது.
 

trade port container


இது ஒரு புறமிருக்க, அமெரிக்க பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி போடும் நாடுகள் அனைத்துக்கும் எதிராகவும் பேசியுள்ளார் ட்ரம்ப். 'ஜி7 நாடுகள் மட்டும் அமெரிக்காவுக்கு அதிகமான வரி விதிப்பைப் போடுவதில்லை. இந்தியாவும் அப்படித் தான் செய்கிறது. அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் 100 சதவிகிதம் வரி விதிப்பு போடப்படுகிறது. ஆனால், அங்கிருந்து இங்கு இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு வரி விதிப்பே போடப்படுவதில்லை. இது சரியல்ல. நம்மை எல்லோரும் கொல்லையடிக்கின்றனர். எனவே இது குறித்து அனைத்து நாடுகளுடனும் பேசிக் கொண்டிருக்கிறேன். இது கண்டிப்பாக முடிவுக்கு வரும். இல்லையென்றால் அவர்களுடன் நாம் வர்த்தகமே செய்யப் போவதில்லை. எனவே, ரெசிப்ரோகல் வரி தான் ஒரே தீர்வு. நான் இந்தியாவை குறை கூறவில்லை. ஆனால், இருவரும் ஒரே தளத்தில் இருப்பது தான் இறுதி தீர்வு' என்று விளக்கம் அளித்துள்ளார் ட்ரம்ப்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ட்ரம்ப், 'இந்தியாவுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் ஹார்லி டேவிட்சன் மற்றும் பிற நிறுவன வாகனங்களுக்கு 100 சதவிகித வரி போடப்படுகிறது. ஆனால், அங்கிருந்து இங்கு இறக்குமதியாகும் ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு வரி விதிப்பே இல்லை' என்று நொந்துகொண்டார். இதையடுத்து மோடி, 100 சதவிகித வரியை 50 சதவிகிதம் வரை குறைத்துள்ளதாக ட்ரம்ப்பிடம் தெரிவித்தார். ஆனால் ட்ரம்ப்போ, 'இந்த வரி குறைப்பு போதாது. 100 சதவிகிதம் என்பது பூஜியம் சதவிகிதம் ஆக வேண்டும்' என்றார் உறுதியாக.

.