பிரதமரின் சுதந்திர தின உரையில் ககன்யான் திட்டம் பற்றிய அறிவிப்பு இடம்பெற்று இருந்தது
New Delhi: மனிதர்களை விண்வெளிக்குக் கொண்டுசெல்லும் விண்கலத்தை முதன்முறையாக இந்தியா விண்ணில் செலுத்த உள்ளது. ககன்யான் (#GAGANYAN) என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்விண்கலத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் ஏழு நாட்களுக்கு விண்வெளிக்குச் செல்ல உள்ளனர். பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து 300-400 கிமீ தொலைவில் இவ்விண்கலம் நிலைநிறுத்தப்படும்.
அணுசக்தி, விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் இதுபற்றி விவரிக்கையில் “ஜிஎஸ்எல்வி எம்கே III என்னும் ராக்கெட் மூலம் இவ்விண்கலம் ஏவப்படும். மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக ககன்யான் விண்கலம் இரண்டு முறை ஆளில்லா விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்ளும். இத்திட்டம் முழுதும் 2022க்கு முன்பாக நடத்தி முடிக்கப்படும். இன்னும் 30 மாதங்களில் ஆளில்லா ககன்யான் பயணம் தொடங்கும். இத்திட்டத்தின்படி மூன்று விண்வெளி வீரர்கள் ஏழு நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். பூமியில் இருந்து 300-400 கீமீ தொலைவிலான சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்படும். இத்திட்டத்துக்கு 10,000 கோடி ரூபாய் வரை செலவாகலாம்” என்று கூறினார்.
பிரதமரின் சுதந்திர தின உரையில் ககன்யான் திட்டம் பற்றிய அறிவிப்பு இடம்பெற்று இருந்தது. 2022க்கு முன்பாக இந்திய வீரர்கள் விண்வெளியில் மூவர்ணக்கொடியை பறக்கவிடுவர் என்று அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இஸ்ரோ, கல்வியாளர்கள், தொழில்துறையினர், அரசு மற்றும் தனியார் ஏஜென்சிகள் எனப் பலரும் இதில் பங்குகொண்டுள்ளனர். இச்சிக்கலான திட்டம் உண்மையாகவே இந்தியாவின் ஒரு பெருமுயற்சியாக இருக்கும். இதன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களைச் சுமந்துசெல்லும் விண்கலத்தை அனுப்பியுள்ள நாடுகளின் பட்டியலில் நான்காவதாக இந்தியா இணையும். இத்திட்டத்தை விரைவுபடுத்த பிற நாட்டு விண்வெளி அமைப்புகளின் உதவியையும் இந்தியா நாடலாம்” என்றும் அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறினார்.