This Article is From Nov 12, 2018

நாகை - சென்னைக்கு இடையில் 15-ல் கரையைக் கடக்கும் ‘கஜா’ புயல்: வானிலை மையம்

நாகைக்கு வடகிழக்கில் 820 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது கஜா புயல்

நாகை - சென்னைக்கு இடையில் 15-ல் கரையைக் கடக்கும் ‘கஜா’ புயல்: வானிலை மையம்

தமிழகத்துக்கு அருகே ‘கஜா' புயல் நிலை கொண்டுள்ள நிலையில், வரும் 14 ஆம் தேதி முதல் அடுத்த நாள் 15 ஆம் தேதி வரை மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இது குறித்து சென்னையில் இருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், ‘கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், காரைக்கால், புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் 14 ஆம் தேதி இரவு முதல் பலத்த காற்று வீசும். அன்று கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.

நாகைக்கு வடகிழக்கில் 820 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது கஜா புயல். 15 ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் நாகை - சென்னை இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 கிலோ மீட்டர் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். 100 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால், விழுப்புரம், கடலூர் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

கஜா புயலையொட்டி, தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும், ரெட் அலர்ட் குறித்து மக்கள் அச்சம்கொள்ள வேண்டாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.