கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் பொதுமக்கள், தமிழக அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பாகவும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அதன் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கேரள அரசிற்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
பேரிடர் காலங்களில் மனிதாபிமான உணர்வுகள் அதிகம் மேலோங்கிட வேண்டும். கஜா புயலின் தாக்கத்தினால் எங்கள் மக்கள் இழந்திருக்கும் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து மீண்டு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.
பயிர்கள் சேதாரமடைந்து, மரங்கள் வேருடன் சாய்ந்து படகுகளை இழந்து, மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தையே இழந்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு, மானுட கருணையை உணர்த்திட வேண்டிய நேரம் இது. இதுதான் எங்கள் தமிழ்நாட்டிற்கு இப்போதைய தேவையாக இருக்கிறது.
இவ்வாறு கமல்ஹாசன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.