This Article is From Nov 16, 2018

கரையைக் கடந்த கஜா… எந்தெந்த மாவட்டங்களில் கனமழை..?

நள்ளிரவு 12 மணிக்கு மேல், கஜா புயல் நாகை - வேதாரண்யத்திற்கு இடையே கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது

கரையைக் கடந்த கஜா… எந்தெந்த மாவட்டங்களில் கனமழை..?

வங்கக்கடலில் உருவான ‘கஜா' புயல் கரையைக் கடந்துள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல், கஜா புயல் நாகை - வேதாரண்யத்திற்கு இடையே கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருக்கிறது. சில மாவட்டங்களில் ஏற்கெனவே மழை ஆரம்பித்துவிட்டது.

புயல் எதிரொலியை அடுத்த தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கஜா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘தென் தமிழகத்தில் இன்று மிகக் கனமழை பெய்யும். சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் தேனி ஆகிய இடங்களில் இன்று மிக மிக அதிக மழை பெய்யக்கூடும்.

அதேபோல, திருச்சி, கரூர், திருப்பூர், வால்பாறை, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கஜா புயல் கரையைக் கடந்திருந்தாலும், இன்னும் அது வலுவுடன் தான் இருக்கிறது. எனவே எப்போதும் இல்லாத வகையில் புதுக்கோட்டை, வடக்கு சிவகங்கை, தெற்கு திருச்சி மற்றும் கரூர், திண்டுக்கல், வடக்கு மதுரை மற்றும் தேனி ஆகிய இடங்களில் சூறைக் காற்று வீசும்.

தென் தமிழகத்தில் அதிக மழை பெய்ய உள்ளதால், சென்னைக்கு மழை சொல்லிக் கொள்ளும்படி இருக்காது' என்று பதிவிட்டுள்ளார்.

.