This Article is From Nov 13, 2018

24 மணி நேரத்தில் தீவிரமடையும் ’கஜா’ புயல்! - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னையில் இருந்து 720 கி.மீ. தொலைவில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 24 மணிநேரத்தில் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

24 மணி நேரத்தில் தீவிரமடையும் ’கஜா’ புயல்! - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நவம்பர் 15ம் தேதி கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்றும் சென்னையில் இருந்து 720 கி.மீ. தொலைவில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 24 மணிநேரத்தில் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது. இந்த நிலையில், இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு ‘கஜா' என பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் இன்று கூறியதாவது,

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல், சென்னையில் இருந்து கிழக்கு - வடகிழக்காக 720 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு வடகிழக்காக 820 கிலோ மீட்டர் தூரத்திலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.

இது மேலும் மேற்கு மற்றும் தென் மேற்காக நகர்ந்து வரும் 24 மணி நேரத்தில் தீவிர புயல் சின்னமாக வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் அதே தீவிரத்துடன் நீடிக்கும். இதைத்தொடர்ந்து, கடலூர் - பாம்பன் பகுதிகளுக்கு இடைப்பட்ட தூரத்தில் நவம்பர் 15ம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் சின்னமானது சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத் தீவுகளை தொட்டபடி விரிந்து பரந்து உள்ளது. இதன் காரணமாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் ஒரு சில இடங்களில் நவம்பர் 14ம் தேதி இரவு முதல் கன மழை பெய்யக் கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம் மணிக்கு 45 - 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும்.

இது படிப்படியாக உயர்ந்து 14ம் தேதி நள்ளிரவில் மணிக்கு 80 - 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். அந்த நேரத்தில் கடல் பரப்பு மிக மோசம் முதல் மிக மிக மோசம் என்ற நிலையில் இருக்கும்.

தமிழகத்தில் வட மாவட்டங்களில் அதிதீவிர கனமழையும், மற்ற பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.