இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,
கடந்த 6 மணி நேரமாக இந்த புயல் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது நாளை நவ.15 ஆம் தேதி முதல் பாம்பனுக்கும் - கடலூருக்கும் இடையே கரையை கடக்கக் கூடும். இதன் காரணமாக நாளை கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும்.
மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். சமயங்களில் 100 கிமீ வரை வீசக்கூடும். இந்த மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை மிக கனமழை பெய்யக்கூடும். கஜா புயல் தற்போது புயல் சின்னமாகவே இருக்கிறது. இது தீவிரமடைந்தாலும் பிறகு வலுவிழந்து புயலாகவே கரையைக் கடக்கும்.
இதனால், மீனவர்கள் 15ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளிலும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை நாளை முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.