This Article is From Nov 12, 2018

தமிழகத்தை நோக்கி தீவிரமடையும் ’கஜா’ புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நவம்பர் 12ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தை நோக்கி தீவிரமடையும் ’கஜா’ புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தை ‘கஜா' புயல் நெருங்கி வருவதாகவும், அதனால், வடதமிழகத்தில் வரும் 15-ம் தேதி 20 சென்டி மீட்டர் அளவுக்கு பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், நேற்று தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்கு தற்போதுசென்னைக்கு கிழக்கே 860 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. நெல்லூரில் இருந்து 900 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, இந்த புயல் கடலூருக்கும் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே வரும் 15ம் தேதி காலை 11 மணியளவில் கரையை கடக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் வரும் 14ம் தேதி இரவு தொடங்கி தமிழகம், புதுவை, வடதமிழக கடலோர மாவட்டங்களில் 80 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 

இதனால், நவம்பர் 12ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் அன்றைக்குள் கரைக்கு திரும்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வரும் 14ம் தேதி இரவு முதல் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும். 15ம் தேதியில் வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்தார். 

தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும்,  ரெட் அலர்ட் குறித்து மக்கள் அச்சம்கொள்ள வேண்டாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.