இந்திய முன்னாள் துவக்க வீரரான கவுதம் கம்பீர் சமீபத்தில் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் வெளியேறினார். அதன் பின் அவர் அரசியலில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின.
இந்தச் செய்திகளையெல்லாம் வதந்தி என்று மறுத்துள்ளார் கம்பீர். மேலும் அதில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார். ''எனக்கு அரசியலில் இணையும் எண்ணமெல்லாம் இல்லை. நான் சமூக சேவைகள் செய்யதான் ஆரம்பித்திருக்கிறேன். அது எதற்காக என்றால் மக்களுக்கு நல்லது செய்ய மட்டுமே, அரசியலுக்காக அல்ல. அரசியலில் இணைவேன் என்ற செய்தி வதந்தி'' என்று கூறியுள்ளார்.
"அதே போல ஃபேர்வெல் ஆட்டங்கள் ஒன்றும் பெரிய விஷயமல்ல. நாட்டுக்காக ஆட வேண்டும், இந்தியா வெல்ல வேண்டும் என்பதே கடைசி வரை கிரிக்கெட்டில் எனக்காக நோக்கம். எனக்கு நிறைய வாய்ப்புகளை இந்த அணி வழங்கியுள்ளது. அதை மறுக்க முடியாது ஆனால் இது தொடர்ந்து கொண்டே இருக்காது" என்று தெரிவித்தார் கம்பீர்.
பெண்கள் கிரிக்கெட் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ''பெண்கள் கிரிக்கெட் உச்சத்தில் உள்ளது. மீடியாக்கள் அவர்களுக்கு சரியான முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்கள் சர்வதேச அளவில் சிறப்பாக ஆடுகிறார்கள்" என்றார்.
கம்பீர் மொத்தம் 58 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4154 ரன்களையும், 147 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5238 ரன்களையும் குவித்தார் என்பது குறிப்பிடத்தகது.