விளையாட்டு வீரர்களுக்கு யோகா பயிற்சி அவசியம் என்கிறார் கவுதம் காம்பீர்.
ஹைலைட்ஸ்
- சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
- நாடு முழுவதும் யோகா சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன
- இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்தது
New Delhi: ஜிம்முக்கு செல்வதை விட யோகா செய்வதில்தான் பலன் அதிகம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் யோகா சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், சினிமா, அரசியல், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் காம்பீர் பங்கேற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-
விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு யோகா மிகவும் முக்கியமானது. விளையாட்டு வீரர்கள் எப்போதும் யோகா பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும். ஜிம் மற்றும் யோகா ஆகிய இரண்டுமே சிறந்ததுதான். ஆனால் யோகா கவனத்தை ஒருங்கிணைக்கவும், உடலில் அமைதியை ஏற்படுத்தவும் உதவும். ஜிம்மை விட யோகா செய்வதில்தான் பலன்கள் அதிகம்.
உடலை மட்டும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவாமல், மனதை வலிமைப்படுத்தவும் யோகா உதவும். மக்களின் மனம் வலிமையாக இருந்தால் நாடும் வலிமையாக இருக்கும்.
இவ்வாறு காம்பீர் கூறினார். இந்திய கிரிக்கெட் அணிக்காக கவுதம் காம்பீர் 15 ஆண்டுகளாக விளையாடியுள்ளார். 58 டெஸ்ட் போட்டிகளில் 4,154 ரன்களும், 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,238 ரன்களும் அவர் எடுத்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட காம்பீர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.