This Article is From Dec 27, 2019

“ஹிட்லர் பாதையில் காந்தி தேசம்!”: CAA - NRC பற்றி ப.சிதம்பரம் சுட்டெறிக்கும் பேச்சு!

CAA - NRC Protest- "எடுத்த எடுப்பில் இந்து ராஷ்டிரத்தை அமைக்கத்தான் இவர்கள் துடிக்கிறார்கள்"

Advertisement
இந்தியா Written by

CAA - NRC Protest- கடந்த 2 வாரங்களாக இந்திய அளவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் தேசிய குடிமக்கள் பதிவேடான என்ஆர்சிக்கு எதிராகவும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி சென்னையில் நடந்தக் கூட்டத்தில் அதிரடியாக பேசியுள்ளார். 

ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரின் போது ஆட்சி புரிந்த ஹிட்லர் தலைமையிலான நாஜிக்களை பாஜகவோடு ஒப்பிட்டு, தனது உரையை ஆரம்பித்தார் சிதம்பரம், “1930 முதல் 1940 வரை ஐரோப்பிய வரலாற்றைப் படித்தவர்களுக்கு, இந்தியாவில் தற்போது நடப்பதைப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது. அங்கு ஹிட்லர் தலைமையிலான ஆட்சி, யூதர்களை கொன்று குவிக்கக் கொண்டு வந்த சட்டத் திட்டங்களைத்தான், தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக பாசிச பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. 

ஒரு காந்தி தேசம், ஹிட்லரின் பாதையில் பயணிக்கிறது. இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இரவில் இந்தச் சட்டம் பற்றியும் ஆட்சியாளர்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பற்றியும் யோசித்துப் பார்த்தால் தூக்கமே வருவதில்லை. இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமே எதிரானது என்று யாரும் கருதிவிட வேண்டாம். அப்படித்தான் அரசு மாற்றப் பார்க்கிறது.

முதலில் அவர்கள் முஸ்லிமகளைக் குறிவைத்துள்ளார்கள். அடுத்து தங்களுக்கு எதிராக இருக்கும் ஒவ்வொரு பிரிவாக குறி வைப்பார்கள். இன்று நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால், நாளை யாரும் இருக்க மாட்டோம். 

5 ஆண்டுகள் ஆட்சி செய்த அரசு, மீண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அரியணையில் ஏறுகிறது என்றால், பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும். வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டும். வறுமையை ஒழிக்க வேண்டும். விவசாயிகள் பிரச்னையைப் போக்க வேண்டும். ஆனால், எடுத்த எடுப்பில் இந்து ராஷ்டிரத்தை அமைக்கத்தான் இவர்கள் துடிக்கிறார்கள்.

Advertisement

இந்து ராஷ்டிரம் என்பது மீண்டும் உயர்ந்த சாதி, நிலபிரப்புத்துவ முறைக்குத்தான் இந்தியாவை இட்டுச் செல்லும். இவர்கள் இந்து ராஷ்டிரத்தை அமைத்தால் முஸ்லிமக்ள மட்டுமல்ல, தலித்துகள், பழங்குடியினர், நாட்டார் மற்றும் சிறு தெய்வங்களை வணங்கும் கிராமத்தினர் என எல்லோரும் பாதிக்கப்படுவார்கள். காரணம், இவர்கள் அனைவரும் இந்துத்துவத்துக்கு எதிராக, இந்து சனாதன தர்மத்துக்கு எதிராக இருப்பார்கள் என்பதால்தான்.

இன்று இந்தியாவில் மகத்தான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வெறும் 15 நாட்களில் இங்கு மாபெரும் புரட்சி நடந்துள்ளது. மாணவர்கள் தலைமையில் புரட்சி நடந்து வருகிறது. அவர்கள் போடும் பாதையில் நாம் நடந்தால் போதும்,” என்று உறுதியுடன் உரையாற்றினார். 

Advertisement
Advertisement