Ganesh Chaturthi: இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா 13.9.2018 (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது
Ganesh Chaturthi 2018: இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா 13.9.2018 (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது.
உண்மையில் விநாயகர் அவதரித்த தினத்தையே விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபெருமான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார். அப்போது எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்க கூடாது என விநாயகருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார். அச்சமயம் அங்கு வந்த சிவபெருமானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்.
அப்போது, விநாயகர் தலை இல்லாமல் கிடந்ததை கண்டு பார்வதி தேவி கோபமும், ஆவேசமும் கொண்டார். அவரை சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு பணித்தார். அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது.
அவர்கள் அதன் தலையை வெட்டி எடுத்துச் சென்று சிவனிடம் கொடுத்தனர். அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
சிவன் அந்தப் பிள்ளையாருக்கு ‘கணேசன்’ என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார் என ‘நாரதபுராணத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார கதையாகும்.
பண்டிகை உணவுகள்
விநாயகர் சதுர்த்தி அன்று அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். மேலும், அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ ஆகியவை படைக்கப்பட வேண்டும்