ஹைலைட்ஸ்
- 'நமது அம்மா' அதிமுக-வின் அதிகாரபூர்வ நாளிதழ்
- கமல், இந்த ஆண்டு பிப்ரவரியில் கட்சி தொடங்கினார்
- ரஜினி, சென்ற ஆண்டு டிசம்பரில் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார்
Chennai:
தமிழகத்தில் ஆட்சி புரியும் அதிமுக-வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது அம்மா’-வில் கமல், ரஜினி உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் பற்றி விமர்சனம் செய்து கவிதை வெளியிடப்பட்டு உள்ளது.
‘ஏக்கத்தில் தமிழகம்’ என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கவிதையில், ‘ஜெ. ஜெயலலிதா என்ற ஒற்றைக் குரல் ஒலிக்காது என்பதால், நாட்டை விட்டு ஓடுவேன் என்று கூறியவருக்கும் மையம் தொடங்கும் தைரியம் வருகிறது, உச்ச நட்சத்திர நடிரக்கும் கட்சி தொடங்கும் உத்வேகம் பிறக்கிறது’ என்று கமல் மற்றும் ரஜினியை சூசகமாக குறிப்பிட்டு உள்ளது.
மேலும் அந்தக் கவிதையில், ‘அமீர், பாலா, கரு.பழனியப்பன், கவுதமன் உள்ளிட்ட பட வாய்ப்பு இல்லாத இயக்குநர் எல்லாம் தாடிவிட்டு தமிழினப் போராளி வேஷம் கட்டும் வேடிக்கை பிறக்கிறது. பாரதிராஜா, பார்த்திபன் 10 நாட்களுக்கு ஒரு முறை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகின்றனர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பல திரைப்பட நட்சத்திரங்களை இந்தக் கவிதையின் மூலம் விமர்சிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற தனது கட்சியைத் தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். அதைத் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் டெல்லி வந்தார். அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவர், தொடர்ந்து அதிமுக அரசு மீது விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி’ என்று கூறி தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்துள்ளார். இப்படி, தமிழகத்தின் இரு மாபெரும் திரை நட்சத்திரங்கள் அரசியலுக்கு வந்திருப்பதை அடுத்து, இப்படியொரு விமர்சனக் கவிதை ‘நமது அம்மா’-வில் வெளியிடப்பட்டுள்ளது.