ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டது எப்படி? போலீஸ் தரப்பு விளக்கம்!
New Delhi: ரவுடி விகாஸை கான்பூருக்கு அழைத்துச்செல்லும் போது நடந்த சாலை விபத்தை தொடர்ந்து, விகாஸ் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக உத்தர பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கான்பூர் போலீசார் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரவுடி விகாஸ் துபே அழைத்துச் செல்லப்பட்ட கார், விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த காவலர் காயமடைந்துள்ளனர். இதனிடையே, காயமடைந்த காவலரிடமிருந்து, துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயற்சிசெய்துள்ளார்.
எனினும், போலீஸ் குழுவினர் விகாஸை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது, போலீசார் விகாஸை சரணடையும்படி கோரியுள்ளனர். ஆனால், அதனை ஏற்காமல், விகாஸ் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, தற்காப்புக்காக போலீசார் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, விகாஸ் துபே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு சிகிச்சையின் போது அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக போலீசார் நடத்தி வந்த என்கவுண்டர்கள் குறித்து கேள்வி எழுந்து வருவதால், போலீசார் தங்கள் தரப்பு விளக்கத்தை வெளியிட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும், துபேயின் கூட்டாளிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பதிவில், உண்மையில் கார் கவிழவில்லை. இரகசியங்கள் வெளியில் தெரியவேண்டியதில் இருந்து, உத்தர பிரதேச அரசு காப்பாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே விகாஸ் துபே அவராக சரணடைந்தாரா என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகாகல் கோவிலில் வியாழக்கிழமை காலை விகாஸ் துபே கைது செய்யப்பட்டார். விகாஸ் கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், அவரது கூட்டாளிகள் இரண்டு பேர் தனித்தனி இடங்களில் உத்தரபிரதேச போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.