மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ், 10 இடங்களில் வெற்றி பெற்றது. சமாஜ்வாடி, 5 இடங்களில் மட்டுமே வெற்றியடைந்தது.
ஹைலைட்ஸ்
- உ.பி இடைத் தேர்தலில் தனித்துப் போட்டி- மாயாவதி
- 'துரதிர்ஷ்டவசமாக கூட்டணி வேலை செய்யவில்லை', மாயாவதி
- 'இது நிரந்தர கூட்டணி முறிவு அல்ல'- மாயாவதி
New Delhi: விரைவில் நடக்கவுள்ள 11 தொகுதிகளுக்கான உத்தர பிரதேச சட்டமன்ற இடைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மாயாவதி.
2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டணி வைத்தனர். கூட்டாக தேர்தலை சந்தித்த அவர்களால், உத்தர பிரதேசத்தில் எதிர்பார்த்த அளவுக்குப் பெரும் வெற்றியைப் பெற முடியவில்லை. இதனால், இருவரது அரசியல் கூட்டணி முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி, “சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணியில் இருந்து சிறிது காலம் விலகியிருக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். அரசியல் நிதர்சனங்களைப் புரிந்து கொண்டுதான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இது நிரந்தர கூட்டணி முறிவு அறிவிப்பு கிடையாது என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது உத்தர பிரதேசத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் நாங்கள் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்தோம். ஆனால், அது நடக்கவில்லை. எங்களுக்கு இப்படிப்பட்ட தோல்வி கிடைத்திருக்கக் கூடாது. எங்கள் கூட்டணியின் மிகவும் வலிமையான வேட்பாளர் கூட தோல்வியைத் தழுவினார். டிம்பிள் யாதவ் கூட தோல்வியடைந்தார். நிறைய விஷயங்கள் குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
முதலில் இருந்தே இவர்களது கூட்டணி இரண்டு விஷயங்களை முன் வைத்துதான் உறுதியானது. ஒன்று, உத்தர பிரதேசத்தில் அதிக நாடாளுமன்றத் தொகுதிகளை கூட்டணி கைப்பற்றினால், மாயாவதி பிரதமாவதற்கு அகிலேஷ் உதவ வேண்டும். இதற்கு கைமாறாக உத்தர பிரதேசத்தில் மீண்டும் அகிலேஷ் முதல்வர் ஆக, மாயாவதி உதவி செய்வார் என்பதுதான் அவை. ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், கூட்டணி முறியவே அதிக வாய்ப்புள்ளது.
மாயாவதியின் கருத்து குறித்து சமாஜ்வாடி இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. “எங்களுக்கு அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் வரவில்லை” என்று மட்டும் சமாஜ்வாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த போதும், மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளைக் கூட மாயாவதி - அகிலேஷ் கூட்டணியால் கைப்பற்ற முடியவில்லை. பகுஜன் சமாஜ், 10 இடங்களில் வெற்றி பெற்றது. சமாஜ்வாடி, 5 இடங்களில் மட்டுமே வெற்றியடைந்தது.