ஹைலைட்ஸ்
- கெளரி லங்கேஷ் செப்டம்பர் 2017-ல் கொலை செய்யப்பட்டார்
- ஶ்ரீராம் சேனாவுக்கு இதில் தொடர்பு இருக்குமோ என போலீஸ் விசாரணை
- கொலை தொடர்பாக ஆறுபேர் கைது செய்யப்பட்டு விசாரணை
Bengaluru:
கர்நாடக பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் கொல்லப்பட்டது குறித்து, ஶ்ரீராம் சேனா என்ற வலதுசாரி அமைப்பின், தலைவர் பிரமோத் முத்தாலிக் வன்மமான கருத்துக்களை, வெளியிட்டுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது. கெளரி லங்கேஷ் கொலை தொடர்பாக, பிரதமர் ஏன் எதுவும் பேசவில்லை என்ற கேள்விக்கு “கர்நாடகாவில் ஏதோ ஒரு நாய் இறந்து போனால், பிரதமர் ஏன் வாய் திறக்க வேண்டும்” என்று பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் கூறியது பல தரப்பினர் மத்தியில் ஆத்திரத்தை தூண்டியுள்ளது.
“ காங்கிரஸின் ஆட்சி காலத்தில் கர்நாடகாவில் இரண்டு கொலைகளும், மஹாராஷ்டிராவில் இரண்டு கொலைகளும் நடந்தன. அப்போது யாரும் காங்கிரஸை எதுவும் கேட்கவில்லை. ஆனால், கெளரி லங்கேஷ் கொலை விஷயத்தில் பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார் என பலர் கேள்வி கேட்கின்றனர். கர்நாடகாவில் ஒரு நாய் இறந்தால, பிரதமர் ஏன் பேச வேண்டும்” என்று அந்த கூட்டத்தில் அவர் பேசினார்.
பிரமோத் முத்தலிக்கின் ஶ்ரீராம் சேனா, 2009-ம் ஆண்டு, மங்களூருவில் உள்ள பப்களில் இருந்த ஆண், பெண்களை தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்புக்கும், கெளரி லங்கேஷின் கொலைக்கும் சம்மந்தம இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
கெளரி கொலை வழக்கில் சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பரசுராம் வாக்மாரே கைது செய்யப்பட்ட 3-வது நாள், முத்தாலிக் இப்படி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. வாக்மாரேவுடன், முத்தாலிக் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை அடுத்து, வாகமாரேவை தனக்கு தெரியும் என ஒப்புக் கொண்டார் முத்தாலிக். ஆனால், பின்னர் தனக்கு வாக்மாரேவை தெரியாது என்று அவர் பின்வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
“வாக்மாரேவுக்கும் ஶ்ரீராம் சேனாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவர் எங்கள் அமைப்பின் உறுப்பினரும் இல்லை” என்று பின் வாங்கினார் முத்தாலிக்.
கெளரி கொலை வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜாராகும்படி ஶ்ரீராம் சேனாவின் முக்கிய உறுப்பினரான ராகேஷ் மத்துக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளதாக, காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், ராகேஷ் இன்னும் ஆஜராகவில்லை என்று அந்த அதிகாரி கூறியுள்ளார். கெளரி லங்கேஷை கொலை செய்ய வாக்மாரேவை, ராகேஷ் தூண்டினாரா என்ற கோணத்தில் விசாரிக்க உள்ளதாகவும் கூறினார். கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு 10 மாதங்களானது குறிப்பிடத்தக்கது.