கவுதம் காம்பீருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
New Delhi: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாஜக எம்.பி.யுமான கவுதம் காம்பீர் தனது வீட்டுப் பணிப்பெண்ணின் இறுதிச்சடங்குகளை தானே நடத்தியுள்ளார். ஊரடங்கால் பணிப்பெண்ணின் சடலம் அவரது சொந்த ஊரான ஒடிசாவுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைய ஏற்பட்டது. இதையடுத்து, தானே இறங்கி இறுதிக் காரியங்களை பணிப்பெண்ணுக்காக செய்துள்ளார் காம்பீர்.
டெல்லியை சேர்ந்த பாஜக எம்.பி. கவுதம் காம்பீர் வீட்டில் சரஸ்வதி பத்ரா என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். இவர் ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இந்த நிலையில், சர்க்கரை நோய் மற்றும் இரத்த உயர் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த சரஸ்வதி, கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 21-ம்தேதி உயிரிழந்தார்.
நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தானே இறங்கி, பணிப்பெண்ணின் இறுதிச் சடங்குகளை கவுதம் காம்பீர் நடத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'எனது மகளை சரஸ்வதி மிக அன்புடன் கவனித்துக் கொண்டார். அவரை பணிப்பெண் என்று சொல்ல மாட்டேன். எனது குடும்பத்தில் அவர் ஒருவர். அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்வது என்பது எனது கடமை. சாதி, மத, சமூக அந்தஸ்து வேறுபாடுகளை கடந்து மனிதர்களுக்கு மதிப்பு அளிப்பதில் நான் நம்பிக்கை கொண்டவன். அதன் மூலமாகத்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.' என்று கூறியுள்ளார்.
காம்பீரின் இந்த நடவடிக்கையால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டரில், 'உடல் நலம் பாதிக்கப்பட்டபோது சரஸ்வதியை நல்லபடியாக காம்பீர் கவனித்துக் கொண்டார். ஊரடங்கால் ஒடிசா கொண்டு செல்ல முடியாத நிலையில் சரஸ்வதியின் உடலுக்கு இறுதிச் சடங்கையும் காம்பீர் செய்திருக்கிறார்.
அவரது செயல் தங்களது இருப்பிடத்தை விட்டு தொலைதூரம் சென்று உழைத்து வாழும் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு நம்பிக்கையை அளிக்கும். அனைவரின் சார்பாக காம்பீரை பாராட்டுகிறேன்' என்று கூறியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)