இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஓர் பாலின ஈர்ப்பும் சேர்கையும் குற்றமல்ல என நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 158 ஆண்டு பழமையான ஒரு சட்டமாக இருந்து வந்த சட்டப்பிரிவு 377 தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. ‘இயற்கைக்கு மாறான சேர்க்கை குற்றமானது’ என்ற சட்டம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. முதன்முறையாக நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் தீர்ப்பைக் கேட்ட போது மிகவும் சந்தோஷமடைந்ததாகக் கூறுகிறார் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஹிரிஷி.
கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவர் வின் என்பவரை ஆன்லைன் மூலம் முதன்முதலாகச் சந்தித்துள்ளார் ஹிரிஷி. இதன்பின்னர் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மஹாராஷ்டிராவில் உள்ள யவத்மால் என்ற ஹிரிஷியின் சொந்த கிராமத்திலேயே ஹிரிஷ்-வின் ஜோடியின் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. அன்றைய சூழலில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதுமே தான் மிகவும் பிரபலமடைந்ததாகக் கூறுகிறார் ஹிரிஷி. பெரும்பாலான ஊடகங்கள் இச்செய்தியை நேர்மறை அணுகுமுறையில் இந்த செய்தியைப் பதிவு செய்திருந்தனர். அப்போது ஓர் பாலின ஈர்ப்பு குறித்தான ஒரு விஷயத்தை இந்தியாவின் சரியான முறையில் நான் முன்னெடுத்துச் செல்வதாகவே நம்பினேன். பலரும் எனக்கு ஆதராவக இருந்தனர்.
மக்கள் பலர் ஆதரவு இருந்தாலும் எல்.ஜி.பி.டி உரிமைகள் என்பது இந்தியாவில் இன்னும் வளராமல் இருந்தது. தகுந்த விழிப்புணர்வும் இல்லாது இருந்தது. ஓர் பாலின ஈர்ப்பு, பாலின வெளிப்பாடு, கே மற்றும் லெஸ்பியன் திருமணம் என்னும் பல உரிமைகளுக்காக எங்கள் சமூகம் பொதுச்சமூகத்துடன் போராட வேண்டியதிருந்தது என்று கூறுகிறார் ஹிரிஷ். மேலும் அவர் கூறுகையில், ‘வெளிநாடுகளில் இது போன்ற ஓர் பாலின திருமணங்கள் எவ்வித எதிர்ப்புகளும் இன்றி சிறப்பாகவே நடைபெற்று வருகின்றன. அதனால் இந்தியாவிலும் இந்த சூழல் விரைவில் உருவாகும் என்றே காத்திருந்தேன்.
இந்த சூழலில் தான் சமூக வலைதளங்களில் என்னைப் பற்றியும் என் திருமணத்தைப் பற்றியும் அறிந்த எங்கள் சமூக நண்பர்கள் பலர் என்னைத் தொடர்பு கொண்டு தங்களது நடைமுறைச் சிக்கல்களையும், தங்களுக்கான துணையைத் தேர்வு செய்வதில் நீடிக்கும் குழப்பம் குறித்தும் பேசத் தொடங்கினர். ஆனால், இந்தப் பிரச்னைகள் எல்லாம் பொதுப் பிரச்னை தான். யாருக்கும் சரியான துணை அமைய வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், இந்தியாவில் உள்ள எங்கள் சமூகத்தாருக்கு இருக்கும் பிரச்னைகள் போக சட்டப்பிரிவு 377 என்ற பெரும் பிரச்னை இருந்து வந்தது.
தற்போது இந்தப் பிரச்னையில் இருந்து தீர்வு ஏற்பட்டிருந்தாலும் இந்தச் சட்டம் முன்னதாகவே இருந்திருந்தால் பலரது வாழ்வு நன்றாக அமைந்திருந்திருக்கும். வலிகள் குறைந்திருந்திருக்கும்’ என்றார். மேலும் தற்போது ஹிரிஷ்- வின் தம்பதியினர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவெடுத்துள்ளனர்.