சென்னை பெருங்குடியில் ஜெம் மருத்துவமனை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மருத்துவமனையை தொடங்கி வைத்தார்.
குடல் நோய் மருத்துவ மையம் என்பதை குறிக்கும் வகையில் ஜெம் என்ற பெயர் இந்த மருத்துவமனைக்கு சூட்டப்பட்டுள்ளது. இங்கு குடல் புற்றுநோய்கள், குடலிறக்கம், உடல் பருமன், கல்லீரல் பிரச்னை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த மருத்துவமனை கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை, திருச்சூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிகிச்சைகள் இங்கு வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெருங்குடியில் ஜெம் மருத்துவனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி. பழனிவேலு, ''ஜெம் மருத்துவமனை இந்தியாவிலேயே தொடங்கப்பட்ட முதல் மருத்துவமனை. புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டினால் தீர்க்க முடியாத பல குடல் நோய்களையும் ஜெம் மருத்துவமனை தீர்த்து வைத்துள்ளது. ஜீரண மண்டலம், குடல்நோய், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறைகளை ஜெம் மருத்துவமனை உலகத்தரத்தில் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் நலன்கருதி குறைந்த செலவில் ஜெம் மருத்துவமனை சிகிச்சை அளிக்கிறது" என்றார்.
சி.இ.ஓ. அசோகன் பேசுகையில், ''3டி 4கே அதிநவீன லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோட்டிக் அறுவை மையத்தை ஜெம்மருத்துவமனை கொண்டுள்ளது. அதிநவீன எண்டோஸ்கோபிக் மையம் மற்றும் 24 மணிநேரம் அதிவிரைவு தீவிர சிகிச்சை மையம் போன்றவைகளும் உள்ளன. அதிநவீன பிரிவில் கல்லீரல் செயலிழத்தல் மற்றும் குடல் வால்வு நோய்களுக்கான சிகிச்சைகள் உள்ளன'' என்றார்.
மருத்துவமனை இயக்குனர் செந்தில்நாதன் பேசுகையில், ''அதிநவீன சிகிச்சைகளுக்கும், நோயை முன்கூட்டியே அறிந்து ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்கவும் சிறப்பு மருத்துவமனைகள் அவசியமாகிறது. தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி வெளி மாநிலத்தவர்களும் பயன்பெறும் வகையில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது" என்றார்.