பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பிரதமருடன் நேரடி தொடர்பில் இருப்பார் பிபின் ராவத் (File photo)
New Delhi: ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று முப்படைகளின் முதல் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், அவருக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதி, முப்படைகளின் சேவை விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ராணுவ ஆலோசகராக செயல்படுவார். இவர், பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பிரதமருடன் நேரடியாக தொடர்பு கொள்வார். மூன்று படைகளின் தலைவர்களும் அந்தந்த சேவைகள் தொடர்பான பிரத்யேக விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சருக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்குவார்கள்.
இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட உள்ள பிபின் ராவத்துக்கு அமெரிக்க மற்றும் மாலத்தீவும் முதலாவதாக தங்களது வாழ்த்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியிமிக்கப்படுவதற்கு வாழ்த்துகள். இந்த புதிய பதவியானது, கூட்டுப் பயிற்சி மற்றும் தகவல் பகிர்வு உள்ளிட்ட சமீபத்திய 2+2ல் விவாதிக்கப்பட்டபடி நமது அமெரிக்க-இந்திய ராணுவத்திற்கு இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தனது ட்வீட்டரில் கூறியதாவது, தலைமைத் தளபதி ராவத் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்த உதவி செய்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாஹித், மாலத்தீவு - இந்தியா பாதுகாப்பானது மிகவும் வலுவானதாக உள்ளது என்று கூறிய அவர், இந்தியாவின் முதல் பாதுகாப்புத் தளபதியாக நியமிகப்படும் பிபின் ராவத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். #MaldivesIndiaDefencePartnership மிகவும் வலுவான நிலையில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தினத்தன்று உரையாற்றியபோது, 'ராணுவத்தின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில், ராணுவம், கடற்படை, விமானப் படை என, முப்படைகளின் தலைமை தளபதி நியமிக்கப்படுவார்' என, அறிவித்தார்.
இதன்படி, ராணுவம், கடற்படை, விமானப் படை தளபதிகளைப் போல், தலைமை தளபதியும், நான்கு நட்சத்திர அந்தஸ்து உடைய ராணுவ அதிகாரியாக இருப்பார் என்றும், அறிவிக்கப்பட்டது