இந்த உத்தரவு, பாரபட்சமாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது அதீத அழுத்தம் இருப்பது கண் கூடாத தெரிகிறது- மாயாவதி
New Delhi: மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அமித்ஷா நடத்திய சாலைப் பேரணியின் போது கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்னரே பிரசாரங்களை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம். இந்த உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொதித்தெழுந்துள்ளன. மேலும் தேர்தல் ஆணையம், மோடி தலைமையிலான அரசுக்குச் சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளன.
இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ‘பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பாஜக-வினர் பலரும், மம்தா மீது ஒருதலைபட்சமான தாக்குதலை நடத்துகின்றனர். இது பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு அழகல்ல.
இந்த உத்தரவு, பாரபட்சமாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது அதீத அழுத்தம் இருப்பது கண் கூடாத தெரிகிறது.' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
வங்கத்தில் கலவரம் நடந்ததைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முடிய வேண்டிய பிரசாரங்கள், வியாழக்கிழமை 10 மணியுடன் நிறைவடையும் என்று ஆணை பிறப்பித்தது. மேற்கு வங்க கலவரத்தின் போது, மறைந்த சமூக சீர்திருத்தவாதி, ஈஷ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை தகர்க்கப்பட்டது.
இந்த உத்தரவுக்கு மம்தா, “தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு ஜனநாயகத்துக்குப் புறம்பானது. பிரதமர் மோடியின் பிரசாரங்கள் முடிவடையும் போது, தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வரும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று சாடியுள்ளார்.
காங்கிரஸ் தரப்பு, “தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு சட்ட சாசனத்துக்கு எதிரானது. மோடி-ஷா இணையற்கு தேர்தல் ஆணையம், பொம்மை போல செயல்பட்டு வருகிறது” என்று விமர்சித்தது.