This Article is From Apr 16, 2019

‘’மோடி கேமரா வைத்து விட்டார்; காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் கண்டுபிடித்து விடுவோம்’’

மக்களவை தேர்தலையொட்டி குஜராத்தில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

‘’மோடி கேமரா வைத்து விட்டார்; காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் கண்டுபிடித்து விடுவோம்’’

மோடி சிசிடிவி விவகாரத்தை லாலு பிரசாத் யாதவ் கிண்டல் செய்துள்ளார்.

New Delhi:

குஜராத்தில் பாஜக தலைவர் ஒருவர், ‘வாக்குப்பதிவு மையங்களில் மோடி சிசிடிவி கேமரா வைத்துவிட்டார். காங்கிரசுக்கு யாராவது ஓட்டுப் போட்டால் அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து விடுவோம்' என்று பேசியுள்ளார். இந்த விவகாரம் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் தஹோத் மக்களவை தொகுதியில் பாஜக சார்பாக ஜஸ்வந்த் சிங் பாபோர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து பதேபுரா தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் கதாரா பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, ‘தஹோத் தொகுதியில் போட்டியிடும் ஜஸ்வந்த் சிங் பாபோரின் புகைப்படம் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்கும். அதற்கு நேராக தாமரை சின்னம் இருக்கும். அதில்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

இந்த முறை மோடி சிசிடிவி கேமராக்களை வைத்து விட்டார். மாற்றி எவரேனும் ஓட்டுப் போட்டால் நாங்கள் கண்டுபிடித்து விடுவோம். யார் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டார்கள் என்ற விவரம் எங்களுக்கு தெரிந்து விடும்.

ஆதார் அட்டை உள்ளிட்ட கார்டுகளில் புகைப்படங்கள் இருக்கின்றன. அதை வைத்து உங்கள் பூத்தில் குறைந்த ஓட்டு பதிவானால் அங்கு ஓட்டுப் போடதாவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து விடுவோம். பின்னர் உங்களுக்கு வேலை வாய்ப்பு எங்கள் மூலம் கிடைக்காது' என்றார்.

அவர் பேசிய இந்த விவகாரம் வைரலாகி வருகிறது. இதனை கிண்டல் செய்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ், ‘மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. அப்பாவி மக்கள் பாஜகவுக்கு ஓட்டுப்போடும்படி கட்டாயப் படுத்தப்படுகின்றனர்.' என்று கூறியுள்ளார்.

முன்னதாக பாஜகவின் உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் வேட்பாளர் மேனகா காந்தி, தான் வெற்றிபெற முஸ்லிம்களின் வாக்குகள் தேவையில்லை என்றும் தனக்கு வாக்களிக்காதவர்கள் தன்னிடம் இருந்து உதவியை எதிர்பார்க்கக் கூடாது என்றும் பேசினார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

.