This Article is From Apr 13, 2019

''வாக்குப்பதிவின்போது 4,500 எந்திரங்கள் செயலிழந்து விட்டன'' சந்திரபாபு குற்றச்சாட்டு!!

General Elections 2019: ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த முறை 78.8 சதவீதமாக வாக்குப்பதிவு இருந்தது. ஆனால் தற்போத 66 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.

தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து சந்திரபாபு நாயுடு புகார் அளித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • தேர்தல் ஆணையரை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினா
  • 150 வாக்குப்பதிவு மையங்களில் மறுதேர்தல் வைக்க கோரினார்
  • கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தர்ணாவில் ஈடுபடுவதாக அறிவிப்பு
New Delhi:

ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலின் போது  சுமார் 4,500 வாக்குப்பதிவு எந்திரங்கள் செயலிழந்து விட்டதாகவும், மோடியின் வழிகாட்டுதல்படி தேர்தல் ஆணையம்  செயல்படுவதாகவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். 

தங்களது கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறைவேற்றாவிட்டால் தர்ணாவில் ஈடுபடப் போவதாகவும் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திராவில் மொத்தம் 25 மக்களவை தொகுதிகளும், 175 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இங்கு முதல்கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த முறை 78.8 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இந்த தேர்தலில் 66 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 

இந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிவர செயல்படவில்லை என்று கூறி, ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது-

150 வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு எந்திரங்கள் சரிவர செயல்படவில்லை. இங்கு மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் சுயாட்சி அமைப்புதான். இருப்பினும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒத்துழைப்பு தரவில்லை. 

ஆந்திர தேர்தலின்போது 4,583 வாக்குப்பதிவு எந்திரங்கள் செயலிழந்து விட்டன. இது நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரும் பேரழிவு என்றுதான் சொல்ல வேண்டும். விவிபாட் சிலிப்புகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நான் மேல் முறையீடு செய்ய உள்ளேன். 
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார். 
 

.