வெப் சீரியஸ் தொடர்பாக ஈராஸ் நிறுவனத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
New Delhi: பிரதமர் மோடியை மையமாக கொண்ட "Modi - Journey of a Common Man" என்ற இணையதள தொடருக்கு (வெப் சீரிஸ்) தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வெப் சீரிஸை வெளியிடும் ஈராஸ் நவ் நிறுவனத்திற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வாழ்க்கை வராலாற்றை குறிப்பிடும் பயோ பிக் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடத்துள்ளார். இது தேர்தல் காலம் என்பதால் மோடியின் திரைப்படம் மக்கள் மத்தியில் சிந்தனை ரீதியில் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்த நிலையில் இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பேரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் படத்தை பார்த்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நாளை மறுதினம் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நவ், மோடியின் வரலாற்றை தொடராக எடுத்துள்ளது. இதனை இணைய தளங்களில் ஒளிபரப்புவதற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஈராஸ் நவ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-
வெப் சீரிஸில் குறிப்பிடப்படும் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகவும், அரசியல் தலைவராகவும், மக்களவை தேர்தல் வேட்பாளராகவும் உள்ளார். எனவே அவர் தொடர்பான வெப் சீரிஸை ஒளிபரப்பு செய்யக்கூடாது. இந்த தொடரில் மோடியின் இளம் வயது முதல் தேசிய தலைவர் ஆனது வரை குறிப்பிடப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் இந்த தொடர் வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.