Election 2019: காரின் டயரில் இருந்து கட்டுக் கட்டாக பணம் எடுக்கப்படுகிறது.
Bengaluru: Money Seized: கர்நாடகாவில் காரின் டயருக்குள் மறைத்து வைத்து ரூ. 2.30 கோடி பணத்தை கொண்டு செல்வதற்கு முயற்சி நடந்துள்ளது. இதனை பறக்குபடை அதிகாரிகள் அறிந்து பணத்தை கைப்பற்றியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சிவமொக்காவுக்கு பெரும் அளவு பணம் கொண்டு செல்லப்படுவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த முறை நூதன முறையில் காரின் டயருக்குள் பணக்கட்டுகளை மறைத்து வைத்து பணம் கொண்டு செல்லப்படுவதாக ரகசிய தகவலில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து உஷார்படுத்தப்பட்ட பறக்கும் படையினர், வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றின் டிரைவரை விசாரித்ததில், காரின் டயரில் பணம் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து டயரை சேதம் இல்லாமல் பக்குவமாக பிரித்து பறக்கும் படையினர் கட்டுக் கட்டாக இருந்த பணத்தை கைப்பற்றினர். கார் டயரை உருட்டி உருட்டி அவர்கள் பணத்தை எடுக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக இந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தொகையில் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்தவரும் பணத்தை கொள்ளை அடித்துள்ளார்.
இதன்படி ஒவ்வொரு 2 ஆயிரம் ரூபாய் பணக் கட்டிலும், 4 நோட்டுகள் வரைகுறைகின்றன. இதன்படி 100 பணக்கட்டுகளில் குறைந்தது 8 லட்சம் பணத்தை காரை ஓட்டிவந்தவர் சுருட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று மட்டும் கர்நாடகா மற்றும் கோவாவில் நடந்த சோதனையில் ரூ. 4 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.