This Article is From Feb 22, 2019

நடப்பாண்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு? செங்கோட்டையன் விளக்கம்!

நடப்பாண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போதுமே கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு? செங்கோட்டையன் விளக்கம்!

நாடு முழுவதும் தற்போது, 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக் கூறிவந்தது.

இந்தநிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் கடந்த 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்தவேண்டும். அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரம், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரை பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் கடந்த 11-ஆம் தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் வெளியானது. இந்நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்து வருவதாகவும், இந்த ஆண்டே அமலாகும் என கூறப்பட்டது

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போதுமே கிடையாது. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டில் மட்டுமல்ல, எப்போதுமே கிடையாது. இதனால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

.