Jakob Lindenthal என்னும் அந்த மாணவர், சென்னை, ஐஐடி கல்வி நிறுவனத்தில் இயற்பியல் துறையில் முதுகலை படித்து வந்துள்ளார்.
Chennai: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை, ஐஐடி கல்வி நிறுவனத்தில் பயின்று வந்த ஜெர்மனியைச் சேர்ந்த எக்ஸ்சேஞ்ச மாணவரை, மீண்டும் அவரது நாட்டுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
Jakob Lindenthal என்னும் அந்த மாணவர், சென்னை, ஐஐடி கல்வி நிறுவனத்தில் இயற்பியல் துறையில் முதுகலை படித்து வந்துள்ளார். அவர், நேற்று ஆம்ஸ்டர்டாமுக்குப் புறப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, Jakob Lindenthal-க்கு தன் சொந்த நாட்டுக்குச் செல்லுமாறு வாய் வார்த்தையாக உத்தரவு வந்துள்ளதாம்.
Jakob Lindenthal, சிஏஏ-வுக்கு எதிரான பல போராட்டங்களில் கலந்து கொண்ட படங்கள் சென்ற வாரம் வெளியாயின. ஒரு போராட்டத்தில் Jakob Lindenthal, “சீருடை அணிந்த கிரிமினல்கள் கிரிமினல்களே” என்ற பதாகையை வைத்திருந்தார். இன்னொரு பதாகையில் அவர், “1933-1945 வரை இதைப் போல விவகாரம் ஜெர்மனியில் நடந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்படி போராட்டத்தில் கலந்து கொண்டது Jakob Lindenthal-க்கு வழங்கப்பட்ட விசா விதிமுறைகளுக்கு எதிரானது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
Jakob Lindenthal-ஐ மீண்டும் ஜெர்மனிக்கு அனுப்பும் முடிவை எடுத்தது ஐஐடி நிர்வாகமா அல்லது அரசா என்பதில் இன்னும் தெளிவில்லை. இது குறித்து ஐஐடி-ஐச் சேர்ந்த மாணவர்கள், ‘இது வெட்கக் கேடானது' என்று விமர்சித்துள்ளனர். ஐஐடி நிர்வாகம், NDTV-யிடம் இது குறித்து விளக்கம் அளிக்க மறுத்துவிட்டது.
இந்த சம்பவம் குறித்து பல தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்பி சசி தரூர், மத்திய கல்வித் துறை அமைச்சர் ஆர்.பி.நிஷாங்கை டேக் செய்து, ‘இது மிகவும் வருத்தமளிக்கிறது. நாம் உலகிற்கு முன்னுதாரணமாக திகழும் ஜனநாயக நாடாக இருந்தோம். எந்த ஜனநாயக நாடும் கருத்து சுதந்திரத்திற்காக தண்டனை கொடுக்காது. கல்வித் துறை அமைச்சரையும் ஐஐடி மெட்ராஸ் நிர்வாகத்தையும் இந்த முடிவை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவை தலைநிமிரச் செய்யுங்கள்,' என்று ட்விட்டர் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்திற்கு, ‘இந்திய அளவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்' மிகப் பெரும் எதிர்ப்பு இருப்பதாக சொல்கிறது காங்கிரஸ்.
அதே நேரத்தில் இந்தக் குற்றச்சாடுகளை மறுக்கும் மத்திய அரசு தரப்பு, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து மத ஒடுக்குமுறையால் வெளியேறும் அந்நாட்டுச் சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பை வழங்கும் என்கிறது. இந்திய சட்ட சாசனத்தின் மதச்சார்பின்மை இந்தச் சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் சட்டத்தை விமர்சிப்பவர்கள்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் ஜாமியா மலியா பல்கலைக்கழகம் மற்றும் உபியின் ஆலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அந்தப் போராட்டத்தை போலீஸ் அராஜகத்தைக் கட்டிவிழ்த்து விட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் பல கல்வி நிறுவனங்களில் போராட்டம் வெடித்தது.