தமிழக தலைமைச் செயலாளரான கிரிஜா வைத்தியநாதன் ஓய்வுபெறுவதையடுத்து புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கே.சண்முகம் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் தலைமைச்செயலாளராக இருந்து வரும் கிரிஜா வைத்தியநாதன் பணிக்காலம் வரும் நாளையோடு நிறைவு பெறுகிறது. இன்று மற்றும் நாளை அரசு விடுமுறை என்பதால், நேற்றே அவருக்கு தலைமைச் செயலகத்தில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் அவருக்கு புகழாரம் சூட்டப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் அவர் ஓய்வு பெறுவதையொட்டி அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. அந்த வகையில் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற வரிசையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஆளுநரின் செயலாளர் ராஜகோபால், நிலநிர்வாகத்துறை ஆணையர் ஜெயக்கொடி, ஜிஎஸ்டி கவுன்சில் சிறப்பு செயலாளராகப் பணியாற்றி வரும் ராஜீவ் ரஞ்சன், தற்போதைய நிதித்துறை செயலாளர் கே.சண்முகம், உள்துறை செயலாளராக உள்ள நிரஞ்சன் மார்டி ஆகியோர் முன்னணி வரிசையில் இருந்தனர்.
எனினும் இதில் ராஜகோபால், ராஜீவ் ரஞ்சன் ஆகியோருக்கு 2021ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில் மற்றவர்கள் ஓராண்டுக்கும் குறைவான அளவிலே பணிக்காலம் இருந்தது. இந்நிலையில் புதிய தலைமைச் செயலாளராக தற்போதைய நிதித்துறை செயலாளர் கே.சண்முகத்தை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த 1985-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அரசு பணியில் சேர்ந்த சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலாளராகவும் பொறுப்பு வகித்த அனுபவம் பெற்றவர். சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டுமுதல் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக தொடர்ந்து 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலங்களில் ஒரே துறையின் செயலாளராக தொடர்ந்து பொறுப்பு வகித்த ஒரே நபர் ஐஏஎஸ் அதிகாரி சண்முகம் மட்டுமே.
இந்நிலையில் புதிய தலைமைச் செயலாளராக தற்போதைய நிதித்துறை செயலாளர் கே.சண்முகத்தை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நியாயவிலைக்கடைகள் கணினிமயம், தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டமான 'நீட்ஸ்' மற்றும் நீர்நிலைகளைக் காக்கும் குடிமராமத்து திட்டம் போன்றவற்றால் அனைவரையும் ஈர்த்தவர்.
எளிமையான குடும்பத்தில் பிறந்தவரான சண்முகம், இன்றளவும் அதே எளிமையை கடைப்பிடித்து வருபவர். விவசாயம், தோட்டக்கலை போன்றவற்றில் ஆர்வமிக்கவர் என்பது இவரது கூடுதல் பலம் என்று கூறப்படுகிறது.