பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளை கிரிராஜ் சிங் நிர்வகித்து வருகிறார்.
Patna: 1947ம் ஆண்டிலே முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் முக்கிய இடம் வகிக்கும் கிரிராஜ் சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் பூர்ணியா பகுதியில் புதன்கிழமையன்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதாவது, தேசத்திற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டிய நேரம் இது, 1947க்கு முன்பு ஜின்னா இஸ்லாமிய நாடு வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது, நமது முன்னோர்கள் செய்த பெரும் தவறால், அதற்கான பலனை தற்போது நாம் அனுபவிக்கிறோம்.
அப்போது, முஸ்லிம் சகோதரர்கள் அந்த நாட்டிற்கும், இந்துக்கள் நம் நாட்டிற்கும் அனுப்பப்பட்டிருந்தால், நாம் தற்போது இந்த நிலைமையிலிருந்திருக்க மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியலமைப்பை மீறும் வகையில் ஒரு சட்டம் முதன்முறையாக மதத்தை இந்தியக் குடியுரிமையின் அடிப்படையாக ஆக்குகிறது என்றும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் இந்த சட்டத்தைப் பயன்படுத்தப்படும்போது, அவர்களின் பரம்பரையை நிரூபிக்க முடியாத முஸ்லிம்களைக் குறிவைக்க இந்த சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
எனினும், அண்டை நாடுகளில் மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர்களுக்கு உதவ இந்த சட்டம் அவசியமானது என்று அரசு தரப்பில் திட்டவட்டமாகக் கூறப்பட்டு வருகிறது.
கிரிராஜ் சிங் மத்திய அரசால் நன்கு அறியப்பட்ட மத்திய அமைச்சர் ஆவார். இவர் முஸ்லிம்களுக்கு எதிராகப் பலமுறை வெறுப்பைத் தெரிவித்த போதிலும், பாஜக அவரை அரிதாகவே கண்டிக்கிறது.
நான்கு நாட்களுக்கு முன்னதாக கூட, உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய செமினரி தியோபந்த், ஒரு பயங்கரவாதத்தின் நீரூற்று என்று குற்றம் சாட்டிய கிரிராஜ் சிங்கிற்கு, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சம்மன் அனுப்பியிருந்தார். எனினும் அவருக்கு எதிராக விடுக்கப்பட்ட இந்த கண்டனங்கள் சிறிதும் பலனளிக்கவில்லை.