This Article is From Jul 18, 2018

பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமிக்கு 24 மணி நேரத்துக்குள் மனநல ஆலோசனை: சென்னை HC

17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு 24 மணி நேரத்துக்குள் மனநல ஆலோசனை வழங்குமாறு மாவட்ட நீதிபதிக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமிக்கு 24 மணி நேரத்துக்குள் மனநல ஆலோசனை: சென்னை HC

17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு 24 மணி நேரத்துக்குள் மனநல ஆலோசனை வழங்குமாறு மாவட்ட நீதிபதிக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி பாலியல் வன்கொடுமை வழக்கு, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு இரண்டையும் விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி. ஆஷா இருவரை உள்ளடக்கிய முதலாவது அமர்வு இந்த உத்தரவை வழங்கியது. வழக்கறிஞர் சூர்யபிரகாசம்,  பாடம் நாராயணன் இருவரும் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து நீதிமன்றத்தில் கவனப்படுத்தினர். இந்த நிகழ்வுகள் துரதிருஷ்டமானவை என நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருவதால் 24 மணி நேரத்துக்குள் மாவட்டக் குழந்தைகள் நலக்குழு மூலம் சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

போக்ஸோ சட்டத்தின் கீழ், குற்றம் நடைபெற்று 24 மணி நேரத்துக்குள் காவல்துறையால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு குழந்தைகள் நலக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் நான்கு நாட்கள் ஆகியும் குழந்தைகள் நலக் குழுவினருக்கோ, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கோ சிறுமி குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என நாராயணன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மனநல ஆலோசனை, மருத்துவ உதவி, நிவாரணம், சிறுமியின் புனர்வாழ்வு இவற்றுக்கான அவசர தேவை குறித்தும் கோரிக்கை வைத்தார்.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக மாநிலத்தில் 32 மாவட்டங்களிலும் குழந்தைகள் நலக் குழுவில் எந்த நியமனங்களும் வழங்கப்படவில்லை என்பதையும் நாராயணன் தலைமை  நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். உடனடியாக நியமனங்களை மேற்கொள்ள தலைமை நீதிபதி உத்தரவிட்டார். முன்தினம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் வைத்து நடைபெற்ற தாக்குதல் பற்றி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதுகுறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சுற்றுலா வந்த 21 வயதான ரஷ்யப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.