தனது அமைச்சரவையில் இருந்த 12 அமைச்சர்களுடன் பிரமோத் சாவாந்த் பதவியேற்றுக்கொண்டார்.
New Delhi: கோவா சட்டப்பேரவையில் புதிய முதல்வராக பொறுப்பேற்ற பிரமோத் சாவாந்த் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று காலை நடைபெற உள்ளது. இதற்காக பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மறைந்த நிலையில், புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் நேற்று அதிகாலை 2மணி அளவில் பதவியேற்றார். அதிக உறுப்பினர்களை கொண்ட தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்தது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜகவிற்கு ஆளுநர் அனுமதி அளித்தார். இதற்காக கோவா சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று காலை 11:30 மணிக்கு கூட உள்ளது.
மொத்தம் 40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டமன்றத்தில் தற்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை 36 ஆக உள்ளது. பாஜகவிற்கு 12 உறுப்பினர்களும், அதன் கூட்டணி கட்சிகளான கோவா முன்னேற்றக் கட்சி மற்றும் மஹாராஷ்ட்ரவாதி கோமந்தக் கட்சி ஆகியவைகளுக்கு தலா 3 உறுப்பினர்களும், பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் 3 பேரும் உள்ளனர்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவை தக்கவைப்பதற்கு பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இரண்டு கூட்டணி கட்சிகளுக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு, சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.
இதனால் பாஜக கூட்டணிக்கு 21 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் உள்ளார். எனவே இந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(with inputs from PTI)