This Article is From Mar 17, 2019

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்!

கோவா முதல்வரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் (63) இன்று காலமானார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்!
Panaji:

கோவா முதல்வரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் (63) இன்று காலமானார். கணைய புற்றுநோய் காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று பானாஜியில் உள்ள அவரது மகன் வீட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூன்று முறை முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோய் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவந்தார். இதைத் தொடர்ந்து கோவா திரும்பிய அவர் அரசுப் பணிகளில் ஈடுபட்டார். எனினும் அவரால் மீண்டும் செயல்பட முடியவில்லை. இதைத்தொடர்ந்து வீட்டில் வைத்தே சிகிச்சையை பெற்று வந்தார்.

இந்நிலையில், அரசுப் பணிகளில் மெல்ல ஈடுபட்ட வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்துவிட்டதாக கூறப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, 'என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை கோவாவுக்கு சேவை செய்வேன்' என்று கூறினார்.

தொடர்ந்து, அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பின்பும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் பானாஜியில் மாண்டோவி நதியின் குறுக்கே அமையும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். அப்போது, மூக்கில் குழாய் பொருத்தப்பட்டு, மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்ட அவர், ஒருவரின் துணையுடனே நடந்து வந்தார்.
இதைத்தொடர்ந்து ஜனவரி மாதம் கோவா சட்டமன்றத்தின் மாநில பட்ஜெட்டை அறிவிக்கும் போது மிகவும் பலவீனமான பேசினார். பின்னர் கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த அவர், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்துவந்தார். இந்நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உயிரிழப்பு செய்தி மிகவும் வருத்தம் அடைய செய்கிறது. பொது வாழ்வில் ஒருமைப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு கொண்டவர், கோவா மற்றும் இந்தியாவின் மக்களுக்கு அவருடைய சேவை மறக்கமுடியாதது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

.