Panaji: கடந்த பல மாதங்களாக, கணைய பாதிப்பு காரணமாக கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் சிகிச்சைப் பெற்று வருகிறார். கணைய பாதிப்பு காரணமாக, அவர் தனது அலுவலகத்துக்கு வருவதையோ, பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்வதையோ தொடர்ந்து தவிர்த்து வந்தார். இந்நிலையில், மாநிலத்தில் கட்டி முடிக்கப்படாத பாலங்கள் சிலவற்றை, அவர் நேற்று ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் போது, அவர் மூக்கில் ஒரு ட்யூப் உடனும், இன்னொருவரின் துணையுடனும் தான் நடந்தார். பாரிக்கர் ஆய்வு செய்யும்போது எடுக்கப்பட்ட படங்களும் வெளியாகி இருக்கின்றன. இதனால், பல மாதங்கள் கழித்து அவர் வெளியே வந்ததும், விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பிறகு, கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி கோவாவில் இருக்கும் தனது வீட்டுக்கு வந்தார் மனோகர் பாரிக்கர். அதன் பிறகு அந்த வீட்டிலிருந்து அவர் வெளியே வரவே இல்லை. இப்போது தான் அவர் முதன்முறையாக வெளியே வந்துள்ளார். அதுவும் தனது பணி நிமித்தமாக.
கோவாவில் கட்டி வரப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாலங்களை ஆய்வு செய்ய வந்த பாரிக்கருடன், இரண்டு மருத்துவர்களும் வந்தனர். பாரிக்கரின் உடல் நலிவுற்ற நிலையைப் உணர்த்தும் வகையிலான படங்கள் வெளியானவுடன், அவரது ஆய்வுப் பணி மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகின.
இந்த விஷயம் குறித்து ஜம்மூ - காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்விட்டர் மூலம், ‘அவரது மூக்கில் ஒரு ட்யூப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்திலும் அவரை பணி செய்யச் சொல்வது மனிதத் தன்மையற்ற செயல். இந்த அழுத்தங்கள் எதுவுமின்றி அவர் குணமடைய ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை..?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து கோவாவில் இருக்கும் எதிர்கட்சிகளும், சில பாஜக கூட்டணி கட்சிகளும் கேள்வி எழுப்பி வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் சிலர் வெளிப்படையாக, கட்சித் தலைமையின் முடிவை விமர்சித்து வருகின்றனர்.